உயிரே படத்தின் முதல்காட்சி..
.png)
தொலைவில் ஒரு கார் வருகிறது. அதன் விளக்கு ஒளி மட்டும் தெரிகிறது.. அந்த கார் சாதாரணமாக கடந்து போவதாய் காட்டப்படவில்லை.. ஒரு கம்பி வலைக்கு இடையே காட்டப்படுகிறது. ஊருக்குள் ஒரு கார் வருவதை மேலே இருந்து டாப் ஆங்கிளில் காட்டியிருக்கலாம்.. அல்லது சாதாரணமாக ஒரு பேன் ஷாட்டாக காட்டியிருக்கலாம்.. இப்படி கம்பிகளுக்கு இடையே காட்ட வேண்டிய அவசியம்..? இங்கு மணிரத்னம் முதல் ப்ரேமில் இருந்தே கதை சொல்லத் தொடங்குகிறார். இந்த ப்ரேமின் மூலம் சொல்லவருவது.. “இந்த ஊர் ஒருவித கட்டுப்பாட்டில் (இராணுவத்தின்) உள்ளது” என்பது தான்.
அலைபாயுதே படத்தின் திருமணக் காட்சி..
.png)
இந்தப் படத்தில் மாதவன்-ஷாலினி திருமணம் ஒரு கோவிலில் வைத்து நடக்கும். இந்த காட்சியை காட்டும் போதுசுற்றி கருப்பு வண்ணம் தெரியும் படி ப்ரேம் வைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை காட்டும் போது நல்ல ஒளியில் “பளிச்” என காட்டுவதுண்டு. இங்கும் அப்படித்தான் காட்டப்படுகிறது. ஆனால் சுற்றி ஏன் கருப்பு வண்ணம் என்றால்... இது கல்யாணம் தான்.. ஆனால் திருட்டுக் கல்யாணம்.
தளபதி படத்தின் ரஜினி - அம்ரிஷ்புரி சந்திப்பு காட்சி

இந்த படத்தில் வில்லன் கேரக்டரான அம்ரிஷ்புரி ரஜினியை மம்முட்டியிடம் இருந்து பிரிந்து வந்து தன்னுடன் சோ்ந்து கொள்ளுமாறு சொல்வார். .ஆனால் ரஜினி எனக்கு நட்புதான் முக்கியம், அதனால் வரமுடியாது என்று சொல்வார். இந்த காட்சியில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல் எதிரெதிராய் நின்று பேசுவார்கள்.. இதன் மூலம் மணிரத்னம் சொல்லவருவது “இருவரும் கருத்துகளால் முரண்பட்டு இருக்கின்றனர்” என்பதே..
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி..

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மழைபெய்து கொண்டிருக்க வளர்ப்பு பெற்றோருடன் தனது பெற்ற தாயை பார்க்க வருகிறாள் பெண். அந்த காட்சியில் வளர்ப்பு பெற்றோருடன் சிறுமி நனையாமல் குடையின் கீழ் இருக்க தாயோ மழையில் நனைந்தபடி இருப்பார். இங்கு, ஒன்று அவரும் குடைக்குள் வரும்படியோ அல்லது அனைவரும் நனைவது போலவோ எடுத்ததிருக்கலாம். அப்படியில்லையென்றால் மழையே வராதபடி காட்சியை அமைத்திருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் இயக்குனர் சொல்லவரும் விஷயமே வேறு. இங்கு வளர்ப்பு பெற்றோரும் சிறுமியும் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றனர். தாயோ இலங்கைத் தமிழர்களின் பிம்பமாக இருக்கிறார். மழையை போருக்கும், இன்னலுக்கும் உருவகப்படுத்தும் இயக்குனர், போரின் பாதிப்பை இலங்கைத் தமிழர்கள் நேரடியாக அனுபவிக்கின்றனர். இந்தியர்களோ ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார். இந்த படத்திற்கு முதலில் அவர் வைத்த தலைப்பு “மஞ்சள் குடை”
இயல்பும்.. இயல்பு மீறலும்..
“மணிரத்னம் இருட்டுலயே வச்சு படம் எடுப்பாருப்பா” என்று சிலர் சொல்வார்கள்.. அவர்கள் ஒரு விஷயத்தை யோசிப்பதில்லை.. பொதுவாக பகல் நேரங்களில் கூட நமது வீட்டிற்குள் எவ்வளவு வெளிச்சம் வருகிறது என்பதை சற்று கவனித்து பார்த்தால் உண்மை புரியும். அஞ்சலி படத்தல் வரும் அப்பார்ட்மென்ட், அலையாயுதேவில் வரும் ரயில்வே குவாட்ரஸ், இதயத்தை திருடாதேவில் வரும் மலைப்பிரதேசத்து வீடு, அக்னி நட்சத்திரம், நாயகன் போன்ற படங்களில் எல்லாம் அந்தந்த இடங்களுக்கான இயல்பான லைட்டிங்கே இருக்கும்.. அந்த இயல்பான லைட்டிங் தான் படத்தின் காட்சிக்கு உயிர் கொடுக்கும்..
இயல்பு மீறல்..
அப்படியானால் இயல்பு மீறலே இருக்ககூடாதா என்றால்.. இருக்கலாம் அது ஏதேனும் ஒரு வலுவான காரணத்திற்காக இருக்கலாம். ஹீரோவை காட்டும் போதெல்லாம் கேமராவை கண்டபடி ஆட்டுவது, சுற்ற விடுவது, தலைகீழாய் காட்டுவது போன்ற விஷயங்கள் மணிரத்னம் படங்களில் இருக்காது.. ஏனெனில் கேமரா என்பது நமது கண்களுக்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. நாம் இயல்பு வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ (பார்க்க) அப்படி மட்டுமே கேமரா ஆங்கிள் இருக்க வேண்டும். அதுவும் கண்களை உறுத்தாதவாறு..
ஆனால் இப்படி ஒரு காட்சியை மணிரத்னம் தனது அக்னிநட்சத்திரம் படத்தில் வைத்திருப்பார். க்ளைமேக்ஸ் காட்சியின் சண்டையில் மருத்துவமனையின் பவர் சப்ளையில் கோளாராகி ஸ்பார்க் அடிக்கும். இதற்கிடையே சண்டை நடக்கும்.. அது ஒரு புது முயற்சி ஆனால்அதுவும் கூட இயல்பானதே..
மற்றொரு மீறல்.. ஆய்தஎழுத்து படத்தில் வரும் யாக்கை திரி பாடலில்.. அந்த பாடல் ஒரு டிஸ்கொத்தெ-வில் ஒலிக்கும் பாடல். அங்கு நாம் தமிழ்பாடலை கேட்பதே நடக்காத விஷயம். ஆனால் அங்கு வெஸ்டர்ன் மியுசிக்கில் ஒரு சுத்தமான தமிழ் பாடல் ஒலிக்கும். அதற்கு அனைவரும் ஆடுவார்கள். இங்கு அழகுக்காக, புதுமைக்காக இயல்பு மீறப்பட்டுள்ளது..
உயிரே படக்காட்சி..
.jpg)
உயிரே படத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வைத்து நடைபெறும் உரையாடல் காட்சியில்.. கதவு அடிக்கடிதிறந்து திறந்து மூடும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஷாருக்கான் தன்னை ஏன் விட்டுப் போனாய் என்று மனிஷாவிடம் கேட்பார். இவருக்கு ப்ரீத்திஜிந்தாவை நிச்சயம் செய்திருப்பார்கள்.. இது ஷாருக்கானின் நிலைமை. மனிஷாவோ கொள்கை, பழிவாங்கும் எண்ணம் இதெல்லாம் இருந்தாலும் மனதில் ஷாருக்கானை காதலித்துக் கொண்டிருப்பார். இரண்டையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலை.. இப்படி இருவரும் மனநிலையும் ஓர் முடிவெடுக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்தப்பு நிகழும்.. இருவரது மனமும் ஒரு முடிவெடுக்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்பதையே அந்த கதவு திறந்து திறந்து மூடும் நிகழ்ச்சியின் மூலம் சிம்பாலிக்காய் உணர்த்தியிருப்பார்.
படத்தில் இருக்கும் ப்ராப்பர்ட்டி கூட கதையை சொல்ல வேண்டும்.. அலைபாயுதே படத்தில் ஷாலினி ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அவர் வீட்டில் உள்ள பொருட்களே அதை சொல்லும். பாண்ஸ் பவுடர், பாராசூட் தேங்காய் எண்ணெய், காய்கறி வாங்கும் மஞ்சள் பை, பழைய மரகட்டில், நாற்காலிகள், எவர்சில்வர் வாட்டர் பில்டர், புடைக்கும் முறம், குக்கர் கேஸ்கெட், சிறய முகம் பார்க்கும் கண்ணாடி, பழைய ஜன்னல் ஸ்கிரீன், சுவற்றில் வரிசையாய் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்கள்.. என நடுத்தரக் குடும்பத்திற்கான பொருட்கள் மட்டும் இருக்கும். மேலும் ப்ராப்பர்ட்டியில் டீட்டெயில் இருக்கும். அதாவது குக்கர் இருப்பதை காட்டுவது நார்மல். குக்கரின் கேஸ்கட் மாட்டப்பட்டிருப்பதை காட்டுவது டீட்ரெயில்.. சாதாரண வீடுகளில் இப்படித்தான் மாட்டி வைத்திருப்போம்..
ஷாலினி வீட்டை விட்டு போகும் பொழுது அவள் ஒரு புத்தம் புதிய சூட்கேசை எடுத்துப் போகவில்லை.. நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலும் தூக்கிப் போடாமல் சோ்த்து வைத்திருக்கும்.. உள்ளே கண்ணாடி வைத்த ஒரு பழைய மாடல் பெட்டியையே கொண்டு போகிறாள்.
இதே போல் இந்த படத்தில் திருமணத்திற்கு பிறகு இருவரும் வசிக்கும் வீடு சிமெண்ட் இல்லாமல் வெறும் செங்கல் கட்டிடமாய் இருக்கும்.. அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே முழுமையான புரிதல் இல்லை என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருப்பார்.