Thursday, July 15, 2010

மதராசபட்டினம் - ‘நக்கீரன்’ விமர்சனத்திற்கு ஒரு மறுகுரல்

இது மதராசபட்டினம் படத்திற்கு ‘நக்கீரன்’ இணைதளத்தில் வெளியான விமர்சனத்திற்கு நான் கொடுக்கும் ஒரு மறுகுரல். நக்கீரன் விமர்சனத்தை கீழ்காணும் ‘லிங்’கின் மூலம் பார்வையிடலாம்.

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=50


விமர்சனத்தில் நீங்கள் படத்தின் கதையை சொல்லியிருந்த விதம் மிகவும் அபத்தம்... இப்படி சொல்வதானால் உலகின் எந்த மிகச்சிறந்த படத்தின் கதையையும் மோசமாக சொல்லாம்.

ஹீரோ எதுவும் செய்ய வில்லை என்கிறீர்.. நீங்கள் என்ன எதிர்பாரக்கிறீர்கள்.. வெள்ளையனை ஒற்றை ஆளாய் நின்று டைவ் அடித்து, ட்ராம் வண்டி மேல் எகிறி குதித்து, ஓட ஓட விரட்டி, வெள்ளையனிடம் இருந்து சுதந்திரத்தை பிடுங்கி மக்களுக்கு கொடுத்து விட்டு,  வெள்ளையர்களை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்றா...

முதலில் ஒன்றை புரிந்த கொள்ளுங்கள்.. மதராஸபட்டினத்தை பொறுத்தவரை ஹீரோ அதன் இயக்குனர் விஜய் தான். இந்த கதையில் ஒரு இளைஞன்.. சலவைத் தொழிலாளி ஒரு வெள்ளைக்கார பெண்ணை காதலிக்கிறான். அவ்வளவே அவன் வேலை. மேலும் அவன் மல்யுத்த வீரன் ஆகவே அவனுக்கு ஒரு வாய்ப்பு.. வெள்ளைக்காரனுடன் மோதி அவர்கள் இடத்தை மீட்க கிடைக்கிறது. அதை செய்கிறான். மற்றபடி அவன் ஒரு சாதாரண இளைஞன். எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை. கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதால் ஹீரோ கொடியை ஏந்திக் கொண்டும், வெள்ளையனை விரட்டி அடிக்க வேண்டும், போராட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அப்படி அந்த கால்த்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்த்திருந்தால் வெள்ளையனால் இவ்வளவு வருடம் தாக்குபிடித்திருக்கவே முடியாது. அப்படி இல்லை என்பது தான் வருத்தமே. அதுவும் போக அவன் வெள்ளையன் மீதுள்ள வெறுப்பை அவ்வப்போது காட்டத்தான் செய்கிறான்.. அவனால் முடிந்த அளவுக்கு.. கார் பின்னால் போகும் போது தனது கழுதையை மட்டும் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். அவர்களுக்கு சேவகம் பண்ணிக்கொண்டிருக்க வில்லை. மேலும் அவன் எமியை தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்னாக மட்டும் தான் பார்க்கிறானேயொழிய வெள்ளைக்காரியாய் அல்ல.

சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பல வழிமுறைகளில் பங்காற்றினார்கள்.. அத்தனை தலைவர்களை பற்றியும் சொல்வதற்கும், காட்டுவதற்கும் இது சுதந்திர போராட்டம் பற்றிய படம் இல்லை. இதன் நோக்கம் காதல். முன்பு சொன்னது போல் கதைக்களம் தான் சுதந்திர போராட்ட காலம். அதனால் அவரைப் பற்றி சொல்ல வில்லை இவரைப்பற்றி சொல்லவில்லை என்பது தேவையில்லாத பேச்சு. இந்த படத்தில் எந்த தலைவரையும் ப்ரேமில் காட்டவில்லை என்பதே அதற்கொரு சரியான ஆதாரம். ஏனெனில் இங்கு நோக்கம் அதுவல்ல.



”பகத்சிங் ஆதரவாளராக வரும் பருதியின் தோழர், ஆங்கிலேயரிடம் அகப்பட்டு துப்பாக்கியால் சுடப்படும் போது பயப்பட்டு பீதி அடைவதாக காட்டியுள்ளார் இயக்குனர்..” இதிலென்ன தவறு இருக்கிறது.. மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும்.. மேலும் துப்பாக்கியால் சுடும் போது நெஞ்சை நிமிர்த்திக் காட்ட அவர் பகத்சிங்கின் ஆதரவாளர் தானே ஒழிய, பகத்சிங் கிடையாதே. இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. ஆர்யா தைரியமாக துப்பாக்கி முன் நிற்கிறாறே என்றால்... காதல் இதுவல்ல.. இதைவிட மடத்தனத்தையும் செய்யத் தூண்டும்... காதல் வந்துவி்ட்டால் அங்கு அறிவுக்கு என்ன வேலை இருக்கிறது.. புரட்சிக்காரனை விட காதலில் மரணம் அடைபவன் தான் அதிகம் (பேப்பரை பாருங்கள் சார் புரியும்) புரட்சியாளனை எதிரிதான் கொல்வான்.. காதலனை அந்த காதலே கொல்லும்.

நண்பனை, அவன் காதலை காப்பாற்றத்தானே ‘பகத்சிங் வாழ்க’ என்று சொன்னார்... வேறு தவறான தொழில் செய்பவர்களை தப்பிக்க வைக்க அல்லவே.. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பகத்சிங் இரு உயிர்கள், காதலர்கள்.. அதுவும் ஒரு இந்தியனை நம்பி வந்த ஆங்கிலேயப் பெண்ணை காப்பாற்ற தன்பெயரை பயன்படுத்தியதற்காக பகத்சிங் கோபித்துக் கொள்ள மாட்டார்..

எப்போதும் தனக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள் என்று ஏற்படுத்திக் கொண்டோ அல்லது யாராவது சொன்னதை அதன் உண்மையான அர்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் கூட அறியாமையே... உங்கள் விமர்சனம் அதைத்தான் இங்கு காட்டுகிறது... பெரியார் சொன்ன சீர்திருத்தம் சாதி விட்டு சாதி கல்யாணம். இங்கு மதம், இனம், நாடு எல்லாம் கடந்த ஒரு காதலுக்காக அந்த தலைவர்கள் பெயரை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

காதல் என்று வந்த பின் ஒடுக்கப்பட்ட இனம், தாழ்ந்த இனம், மேல் வர்க்கம்... இதெல்லாம் ஒன்றுமில்லை...

மேலும்,

மதராஸபட்டினம் படத்தில் இருந்த நுட்பமான விஷயங்களை நிறைய பேர் கவனிக்க தவறியுள்ளனர். தேவையில்லாத சில குறைகளையும் சொல்கின்றனர்..

”லகான் படத்தை பார்த்து காப்பியடிச்சிருக்காம்பா” - இது சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.. காரணம் லகானில் வெள்ளையனுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி வரியை நீக்குவார்கள்... இதில் மல்யுத்தம் செய்து தங்களது நிலத்தை மீட்பார்கள்... இதிலும் அந்த படத்தில் வருவதைப் போன்றே ஆடையணிந்திருக்கிறார்கள்...

இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. அப்போது ஏறத்தாழ இந்தியா முழுவதும் இதே போன்ற ஆடையைத்தான் அணிந்திருந்தார்கள்... அதன் பின் இரண்டிலுமே விளையாடுகிறார்கள்... இரண்டிலும் கிரிக்கெட் விளையாண்டால் சொல்லலாம்.. இதில் நாயகன் ஒரு மல்யுத்த வீரன்.. அவன் அதை செய்வதில் தப்பில்லை. லகானிலாவது ஆங்கிலேயரின் விளையாட்டான கிரிக்கெட்டை நம்மவர்கள் வேறுவழியில்லாமல் முறையான பயிற்சி இல்லாமல் விளையாடுவார்கள்.. ஜெயித்தும் விடுவார்கள். இதில், இவன் முறையாய் பயிற்சி பெற்ற சிறந்த வீரன் என்று தான் காட்டுகிறார்கள்.. அற்கேற்ற உடல்வாகும் (அந்த வெள்ளையனை விட நல்ல உடல்வாகு) இவனிடம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவன் அதை விளையாடி ஜெயிக்கிறான் என்று காட்டுவதில் தப்பில்லையே.. மேலும் அவன் அப்போதும் கூட முறைப்படி விளையாடுவதாகத் தான் இயக்குனர் காட்டுகிறார். ஒரு விறுவிறுப்புக்காக பறந்து பறந்து சண்டை போடுவது கிடையாது. இறுதிக்காட்சியில் மணிக்கூண்டிற்குள் அவன் சண்டை போடும் போதும், வெள்ளைக்காரனை தூக்கி வீசும் போதும் அவன் மல்யுத்த பாணியிலேயே சண்டை செய்கிறான். எங்கும் லாஜிக் மீறல் இல்லை.

அதன் பின்,

”படம் டைட்டானிக் மாதிரி இருக்கு”

சில விஷயங்கள் ஒத்து போவது உண்மைதான். டைட்டானிக்கில் பலவருடங்களுக்கு பின் அந்த கப்பலை கண்டெடுப்பதை பார்த்த பெண் பழைய நினைவுகளால் தூண்டப்பட்டு கப்பலை பார்க்க வருகிறாள். இங்கு தான் வாழ்வின் விளிம்பில் உள்ளோம் என்று தெரிந்த பெண் தன் பழைய காதலனை பார்க்க (தனக்கு சொந்தமில்லாத(!) தாலியை அவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க) இந்தியாவிற்கு வருகிறாள்... இரண்டிலும் வெளிநாட்டு வயதான பெண், என்பதும் அவள் ஒருசில காட்சிகளில் இரு ஹீரோயின்களும் தொப்பியை ஒரே மாதிரி வைத்திருக்கிறார்கள் என்பதும், ஒரு காட்சியில், ப்ளாஸ்பேக் முடிந்து தற்போதை நிகழ்வுக்கு திரும்பும் ட்டிரான்ஸெக்ஷன் எஃபெக்ட் இளம் வயது பெண்ணின் கண்களில் ஆரம்பித்து வயதான பெண்ணின் கண்ணில் முடிவதும், ஹீரோயின் படுத்துக் கொண்டு ஆங்கிலப் பாடல் பாடுவதுமாக ஒருசில ஞாபகப்படுத்தும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் கதையின் மையம் வேறு.. கதையும் வேறு.

ஆனால் பொக்கிஷம் படம் போல் உள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்... என் புருஷன் மாதிரியே தான் பக்கத்துவீட்டுக்காரனும் சட்டை போட்டிருக்கான் அதனால அவனும் என் புருஷன் தான் என்பது போன்றது. இரண்டும் பழைய காலத்தில் நடக்கும் கதை என்பதால் இரண்டு படமும் ஒன்றாகுமா?

அதுபோக, இந்த விமர்சனத்தில் ஒரு வார்த்தை கூட அதன் டெக்னாலஜி பற்றி இல்லை. பழைய சென்னையை ஒரு குறைந்த பட்ஜெட்டில், போதுமான டெக்னாலஜி வசதிகள் இன்றி உறுத்தாமல்,
சிறப்பாக செய்திருப்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை...

எமி இந்தியா வரும் போது ஏர்போர்டில் அவளது சூட்கேஸில் ஏர்லைன்ஸால் மாட்டிவிடப்படும் 'Tag' ஆக இருக்கட்டும், ஹனிபா உடம்பு சரியில்லை என்று படுத்திருக்கும் போது அருகில் இருக்கும் அமிர்தாஞ்சன் பாட்டிலாக இருக்கட்டும், மவுண்ட் ரோட்டில் இரு சாலைக்கும் இடையே கயிறு கட்டி நடுவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தெருவிளக்கு, துப்பாக்கி, அரசு முத்திரை, வண்ணான் தாளி, தண்ணீர் கொண்டு போகும் கலன்கள், பித்தளைக் குடங்கள், பழைய சைக்கிள், மின்சாரகம்பங்கள், வேஷ்டி கட்டும் முறை (சாதாரணமாய் கட்டும் போதும் ஒரு மாதிரியும், குஸ்தி போடும் போது இறுக்கமாய் பிடித்து இழுத்தாலும் அவிழாதபடி ஒரு மாதிரியும் கட்டுவார்கள்) மேலும் ரயில், கார், ரயில்வே ஸ்டேஷன், விளம்பர பலகைகள், பூட்டுகள், புத்தகங்கள், செருப்பு, காடா துணி ஆடைகள், என செட்ஒர்க்கில் அவ்வளவு டீட்டெயில்கள்...

மேலும் உறுத்தாத மொழிவழக்கு, திறனாக கையாளப்பட்ட பின்புலம், (இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது பற்றி அறிந்த அப்போதய ஆள் விமானம் கடந்து போகும் போதெல்லாம் “குண்டு போடுறாங்க,  குண்டு போடுறாங்க” என்றபடி ஓடுவது, நம்பி (ஹனிபா) போன்ற ஒரு சிலர் வெள்ளையர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு தான் வசதியாய் வாழ்வது, சுதந்திரம் சோறு போடுமா என்று வறுமையில் வாழும் மக்கள்) என்று ஒவ்வொரு சிறு விஷயத்திலும் டீட்டெயில் காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். அவரது முந்தைய படங்களில் இருந்து இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் தான்.. அதற்காகவே இவரை மிகவும் பாராட்டலாம்.

 மேலும், தனியறையில் எமியும், ஆர்யாவும் இருக்கும்போதாகட்டும், இருவரும் இன்னலுக்கு பின் சந்திக்கும் இடத்திலாகட்டும் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் பெயரளவுக்கு கூட படத்தில் ஆபாசத்தைக் காட்டவில்லை. வெள்ளைக்காரி நடித்திருந்தும் முத்தக்காட்சி கூட இல்லை. இந்த “நல்லபிள்ளை தனத்தை” இவரது முந்தைய படங்களிலும் காணலாம். (தைரியமாக வயசு பிள்ளைகளுடனும், வயதானவர்கள் பி்ள்ளைகளுடனும் பார்க்கக் கூடிய (வேண்டிய) படம்.

விஜய் சார், இதோ மக்கள் உங்களை நல்ல இயக்குனர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் விமர்சனங்களும், பாரட்டுகளும் குவிய ஆரம்பித்துவிட்டதே அதற்கு சாட்சி.. உங்கள் வீட்டு ஷோக்கேஸையும் காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.. விருதுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
 
 

6 comments:

  1. kadal vantha ellam maranathuduma, super thala , nenga pakisatan pennai love panni, indiyavukuk ethira fight pannunga, kadhal than mukiyam

    ReplyDelete
  2. நக்கீரன் கருத்தை மிக அழகாக மறுத்து கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  3. Innaiku dhaan andha padam paathen, naanum anga comment panneerukkaen, adhu ippo pariseelanaila irukku:

    MR. நக்கீரன்! இது எந்த படத்துக்கு எழுதுன விமர்சனம்? இந்த படம் பாக்கும் போது போதைல இருந்தீங்களா இல்ல இந்த விமர்சனம் எழுதும்போது போதைல இருந்தீங்களா? நீங்க சொன்ன "வழக்கமான தமிழ் படம் போல" இது இல்ல.. சொல்ல போன, அரச்ச மாவையே அரைக்கிற படங்கள் மத்தியிலே இது ஒரு புதுமையான படம்.. ஒரு பன்ச் டயலாக் இல்ல, ஒரு குத்து பாட்டு இல்ல.. இந்த படத்துல ரெண்டு மூணு தடவ அந்த தாலிய காட்டுனதுக்காக இத "வழக்கமான தமிழ் படம்"ன்னு சொல்லீட்றதா?காதலைக் காப்பாற்றுவதற்காக பகத் சிங்க் பெயரை பயன்படுத்தியது புத்திசாலித்தனம்..ஒரு புத்திசாலி அந்த சூழ்நிலையில் என்ன செய்வானோ, அதை செய்றதா காட்டி இருக்காங்க, இதுல என்ன தப்பு ?

    ReplyDelete
  4. jothi kumar you are done a good job

    i agree your views

    ReplyDelete