Wednesday, July 28, 2010

தமிழ் சினிமாவும்.. ரசிகனின் மனநிலையும் - 1


                    எனது மொத்த பட டிவிடிகளையும் ரகம் வாரியாக பிரித்து தனியாக அட்டவணைபடுத்தி அடுக்கிவிடலாம். பின்னால் தேவைப்படும் பொழுது எடுக்க வசதியாக இருக்கும் என்று பிரிக்க ஆரம்பித்தேன்... ஆங்கிலப் படங்களை வகை வாரியாக (Action, Comedy, Fantacy, Thriller, Kids) பிரித்து அடுக்கும் போது ஒன்றும் தோன்றாத எனக்கு, தமிழ்படங்களை பிரிக்கும் போது அட்டவணையில்படப்பிரிவு’ என்ற காலத்தில் என்ன எழுதி நிரப்புவது என்றே தோன்றவில்லை. காரணம்.. ஒரு சில படங்களைத் தவிர எல்லா படத்திலும் எல்லாமும் கலந்து ஒரு மசாலாவாகவே இருக்கிறது.. இதற்கு காரணம் என்று யோசித்த போது தோன்றியவைதான்.. கீழ்வரும் இந்த பாரகிராப்புக்களுக்கு காரணம்..

                ‘அவரு மக்களோட டேஸ்ட்டு தெரிஞ்ச டைரக்டர்பா...’ என்று சினிமா உலகத்தில் ஒரு வழக்கு இருக்கிறது.. அதென்னடேஸ்ட்டு”? பொதுவாக ஒரு படம் பார்க்கும் போது ரசிகனின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான படத்தை விரும்புவார்கள்? எந்த காட்சிக்கு  ரசிகனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் இதைத் தெரிந்தவரைத்தான் ‘டேஸ்ட்’ தெரிந்தவர் என்று அழைக்கிறார்கள். இது தெரிந்து விட்டால், எடுக்கும் படம் தோற்காது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு ரசிகனின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். யாருக்கு எது பிடிக்கும் என்று எப்படி தெரிந்து கொள்வது கஷ்டம் தான். ஆனால் துல்லியமாக தெரியாவிட்டாலும்.. ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

                   அதாவது எப்படி படம் எடுத்தால் ஓடும். எப்படி படம் எடுத்தால் ஓடாது. இந்த ரகசியத்தை சொல்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
                
                    சும்மா.. குத்துமதிப்பாய் சொல்லப் போவதில்லை. மக்களின் மனநிலை (அதாங்க.. சைக்காலஜி), கடந்த காலத்தில் மக்கள் ஆதரித்த படங்கள், ஆதரிக்காத படங்கள் போன்றவற்றை கொண்டு ஒரு சிறிய ஆராய்ச்சி(!?) செய்திருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தை எனக்குத் தெரிவிக்கலாம். மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த ஆராய்ச்சியை(?) கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன் வந்த படங்களில் இருந்து இன்று வந்த படங்கள் வரை கணக்கில் கொண்டே செய்கிறேன். இதன் நோக்கம்  நமது தமிழ்  திரைப்படத்தையும், ரசிகனின் ரசனையையும்  பற்றியது  மட்டுமே. மற்றபடி எந்த நடிகரையும், டைரக்டரையும் உயர்த்தி, தாழ்த்தி பேசுவதல்ல.. ஓ.கே.. ஆராய்ச்சி்க்குள் போகலாம்..

                   ஒரு படத்தை பாரக்கும் போது அறிந்தோ அறியாமலோ தன்னை அந்த கதையின் நாயகனாய் வைத்து பார்ப்பதே பெரும்பாலானவர்கள் மனநிலை...
               
                 எப்போது ஒரு ரசிகனுக்கு ஒரு நடிகனை பிடிக்கிறது? ரசிகனது வாழ்க்கையில் எதெல்லாம் நடந்ததோ அல்லது எதையெல்லாம் நடத்த நினைக்கிறானோ, அதை அப்படியே அல்லது அதற்கு வெகு அருகில் ஒரு நடிகன் படத்தில் நடத்திக் காட்டும் போது அவனுக்கு அந்த நடிகனை பிடிக்கிறது.. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு நடிகனுக்கு பதில் டைரக்டரை.. ஏனென்றால் நமது நாட்டில் ஜேம்ஸ் கேமரூனுக்கு மாலை போடுபவர்களை விட டையனோசருக்கு மாலை போடுபவர்கள் தான் அதிகம். அந்த மனநிலையை புரிந்து படம் எடுப்பவர்கள் தான்டேஸ்டுதெரிந்தவர்கள்.. அப்படி டேஸ்டு தெரிய டைரக்டர்களுக்கு தமிழர்களின் மனநிலை தெரிந்திருக்க வேண்டும்.. இது தெரிந்தாலே போதும் கூடுமானவரை ஓடாத படங்களை எடுப்பதை தவிர்க்கலாம்.. சரி.. அப்படி தமிழனின் மனநிலை எப்படித்தான் இருக்கிறது?
                
                  எப்படிப்பட்ட படங்களை எடுத்தால் அந்த படம் ஓடாது என்பதை முதலில் பார்க்கலாம்...

1. மதம், சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சொல்லும் படம்
2. இயற்கை சீற்றம் சார்ந்த படங்கள்
3. போராட்டங்கள், மனித உரிமை போன்ற சீரியஸ் படங்கள்..
4. அனிமேஷன் படங்கள்
5. முழுநீள ஆக்ஷன் படங்கள்
6. பேய் படங்கள், அமானுஷ்ய சக்தி படங்கள், த்ரில்லர்
7. (உண்மையான) சாமிப் படங்கள் (மிக நன்றாக இருந்தால் சி சென்டரில் ஓடலாம்)
8. ஃபேன்டஸி படங்கள்
9. சிறுவர்களுக்கான படங்கள் (இப்படி ஒரு கேட்டகிரி தமிழில் இது வரை வரவும் இல்லை. (பசங்க?) இது சிறுவர்களுக்கான படமா? சிறுவர்களை பற்றிய படமா?)
10. (காதலைத் தவிர்த்து மற்ற) உணர்வுகளைச் சொல்லும் படங்கள்

                     இந்த லிஸ்ட் போய் கொண்டே தான் இருக்கும். நான் முதலில் இந்த லிஸ்ட்டை போட்டிருக்க கூடாது.. எது ஓடும்.. என்ற லிஸ்டை போட்டிருந்தால் வேலை சுலபமாய் இருந்திருக்கும். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. மேலே உள்ள லிஸ்ட்டில் வரும் படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் அந்த படங்கள் ஓடாது.  வேண்டுமானால் பத்திரிக்கைகளிலும், விஷயம் தெரிந்தவர்களிடமும் பெயர் வாங்கும். அவ்வளவே.
                       இதற்காக இந்த மாதிரி படங்களையோ, புது முயற்சி படங்களையோ எடுக்க கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தான் சொல்கிறேன்.

இவை தான் ஓடும்(?)...

1. காதலை மையமாக கொண்ட படங்கள்..
2. காமெடி படங்கள்
3. காதல், கவர்ச்சி, காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் எல்லாம் கலந்த ‘மசாலா’ படங்கள்.

அவ்வளவு தான். இந்த மூன்றே கேட்டகிரி தான் மொத்த தமிழ்படமும்.


இனி இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்..
              
                   ஆங்கிலப்படங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம்... அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மனநிலைகளில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் எந்த கருத்தைப் பற்றிச் சொன்னாலும் அதை பார்ப்பதற்கு ஆதரிப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ்படங்களுக்கு ஏறத்தாழ ஏழு கோடி பேர் மட்டுமே.. அந்த ஏழு கோடி பேரும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் உள்ளவர்கள்.. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்... தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் மனநிலை, காலநிலை, சந்திக்கும் பிரச்சனை, பார்க்கும் டிவி சேனல், அரசியல், எல்லாமே ஒன்று(!) தான்.
               .
                      பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் பெரிய பிரச்சனைகள் எதையும் பார்த்ததில்லை.. மேலும் அதை விரும்புவதும் இல்லை.. அது சமூகம் சார்ந்ததோ இயற்கை சார்ந்ததோ, எதுவாக இருந்தாலும் விரும்புவதில்லை. அதனால் இதை கதையின் மையமாக கொண்ட படங்கள் ஓடாது.
            
                         ஒரு இலங்கை பிரச்சனையை மையமாக கொண்ட கன்னத்தில் முத்தமிட்டால், இந்து-முஸ்லீம் பிரச்சனையை சொன்ன பம்பாய்.. ஜெய்ராம், போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை.. காரணம்.. ‘இவை பற்றியெல்லாம் விவாதிக்க, யோசிக்க நாங்கள் தியேட்டருக்கு வரவில்லை  நாங்கள் படம் பார்க்க வருவது வெறும் பொழுதுபொக்கிற்கு மட்டுமே’ என்பது மக்கள்  வாதம். இதில் இன்னொரு விஷயம் இப்படிப்பட்ட மதம் சார்ந்த பிரச்சனைகளை பற்றிய அந்த படம் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் அதை மக்கள் புறக்கணிக்கத் தான் செய்வார்கள். ஏனெனில் அமெரிக்காவிலோ, மற்ற பெரும்பான்மையான நாடுகளிளோ  இருக்கும் மக்கள் ஏறத்தாழ ஒரே இனத்தை சார்ந்தவர்கள்.. நம் நாட்டில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.. இந்து மதத்தை எடுத்துக் கொண்டாலே சைவக்கடவுள், அசைவக்கடவுள் என்று பல பிரிவுகள் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற இன, மத, ஜாதி பிரச்சனையை எடுத்தால் அந்த படம் கண்டிப்பாக ஒரு சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும். கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகும்.

                      அதே போல்இயற்கை சீற்றத்தை பொருத்தவரை தமிழகம் ஒரு பெரிய பூகம்பத்தையோ, சுனாமியையோ, தொடர்மழையையோ, எரிமலை வெடிப்பையோ, பனிப் பொழிவையோ வெகு அருகில், நேரடியாக பார்த்ததில்லை... தொடர்மழை என்றால் அதிகபட்சம் 4, 5 நாட்கள்.. அதனால் அதைக் களமாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் அவர்களை பாதிப்பதில்லை.. ஒரு வால்கனோ, ஒரு டே ஆப்டர் டுமாரோ, ஒரு 2012 போன்ற படங்களை நமது தமிழ்நாட்டு ‘த்ரில்’ பிரியர்கள் மட்டும் பார்ப்பதோடு சரி.. மற்றவர்கள் அதை சீண்டமாட்டார்கள்...  மேலும் கஷ்டங்களை மறக்க அல்லது மறைக்க விரும்புவதே நமது தமிழர்களின் மனநிலையாக உள்ளது.
                         அதைப்போல வாழ்வின் கஷ்டங்களை. அப்பட்டமான நிஜங்களை சொல்லும் படங்களையும் மக்கள் விரும்புவதில்லை. அதற்கு சிறந்த எடுத்தக்காட்டு ‘மகாநதி’. அதன் அப்பட்டமான யதார்த்தமே.. அந்த படத்தை மறுமுறை பார்க்கவிடாமல் செய்கிறது.

                     மற்றொன்று நமது தமிழ் நாட்டில் டெக்னாலஜிக்கு கிடைக்கும் அவமரியாதை வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காதது.. முழுநீள அனிமேஷன் படத்தை இரண்டு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு எடுத்தால் அதை பொம்மைப்படம், சின்னப்புள்ளைங்க படம் என்று முகத்தை திருப்பிக் கொள்வார்கள்... மொத்தத்தில் அவர்களுக்கு 3டி படம், அனிமேஷன் படம், போன்றவை குழந்தைகள் படம். சரி இந்த படங்களுக்கு குழந்தைகளையாவது கூட்டிப்போவார்களா என்றால்... இல்லை.. தமிழ்நாட்டை பொருத்தவரை பெரியவர்கள் படத்தை தான் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்பது (தலை)விதி(?)
               
                  அதிலும் இவர்கள் லோ பட்ஜெட்டில் கிராபிக்ஸ் பண்ணுகிறேன் போ்வழி என்று ஹீரோ நடக்கையில் தீப்பொறி வரவைப்பதில் இருந்து யானையை கிரிக்கெட் விளையாட விடுவது, காரை பழிவாங்க வைப்பது என்று இறங்குவதையும், மேட்ரிக்ஸின் ‘டைம் ஸ்லைஸிங்’, எபெக்டையும், ‘அனிமேட்ரிக்ஸ்’ எபெக்டையும் ஒன்றாக பாவிப்பதில் இருந்து  நமக்கு ஒரு உண்மை புரியும்... நமது மக்களுக்கு தேவை “மாதிரி” தான்.. ஒரிஜினல் அல்ல... ஐ பாட் மாதிரியே இருநூறு ரூபாய்க்கு ஒரு எம்.பி 3 ப்ளேயர்.. அதில் பாட்டு என்ற ஒன்று வந்தால் போதும்.. இருபதாயிரம் ரூபாய்க்கு இருப்பது மாதிரியான இரண்டாயிரம் ரூபாய் சைனா மொபைல்... இப்படி “மாதிரி”யே போதும்...
             
                இதற்கு சிலர் தமிழக மக்கள் டெக்னாலஜியை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதனால் உணார்வுப் பூர்வமான படங்களைத் தான் விரும்புவார்கள்.. புதுமையான படங்களை ஓட வைத்துள்ளனர் என்று ஒரு லிஸ்ட் கொடுப்பார்கள்... அழகி, அலைபாயுதே, காதல், சேது, 7 ஜி. ரெயின்போ காலனி, ஆட்டோகிராப், சுப்ரமணியபுரம் இது மாதிரியான படங்கள் அதில் இருக்கும்... அவர்களிடம் ஒரு கேள்வி.. “காதல்எடுக்கத் தெரிந்த பாலாஜி சக்திவேல்க்கு கல்லூரியும், சாமுராயும் எடுக்கத் தெரியாதா? ஆட்டோகிராப் எடுக்கத் தெரிந்த சேரனுக்கு தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி எடுக்கத் தெரியாதா? அலைபாயுதே எடுக்கத்தெரிந்த மணிரத்னத்துக்கு கன்னத்தில் முத்தமிட்டால், குரு, இராவணன் எடுக்கத் தெரியாதா? அழகி எடுக்கத் தெரிந்த தங்கர்பச்சானுக்கு சொல்லமறந்தகதை எடுக்கத் தெரியாதா? சேதுவுக்கு பிறகு நல்ல டைரக்டார் என பெயரெடுத்தார் பாலா ஆனால் படம் எதுவும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.. காரணம் டைரக்டர்கள் அல்ல... காதலை எப்படிச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தமிழ் ரசிகர்களுக்கு மற்ற உணர்வுகளை உணர்ந்து பார்க்க நேரமில்லையோ அல்லது விரும்புவதில்லையோ என்னவோ...

                  சிறுவர்களுக்கான படங்கள்... இப்படி ஒரு கேட்டகிரி தமிழில் இது வரை வரவும் இல்லை. பசங்க? இது சிறுவர்களுக்கான படமா? சிறுவர்களை பற்றிய படமா? என்றால் இது சிறுவர்களைப் பற்றிய படம் என்று தான் சொல்வேன்.

                    பேய் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனோ அதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒருவேளை பயமோ என்னவோ... இடைக்காலத்தில் கூட நாளைய மனிதன், வா அருகில் வா, ஜென்ம நட்சத்திரம், என்று சில படங்கள் வந்து கொண்டிருந்தன.. இப்போது ஒன்றும் கண்ணில் படவில்லை. அனந்தபுரத்து வீடு.. காலியாக உள்ளது. நல்ல திரைக்கதை அம்சத்துடன் வந்த விசில் படம் கூட ஓடவில்லை.

                   சாமி படங்களுக்கு கூட முன்பிருந்த மவுசு இப்போது இல்லையென்றே தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அம்மன், பாளையத்தம்மன், என்று சில டஜன்கள் வந்தன.. அதன்பின் ஒன்றும் வந்தது போல் தெரியவில்லை. சமீபத்தில் ‘அருந்ததி’ மட்டுமே நன்றாக ஓடிய ஒரே சாமிப்படம் என்று நினைக்கிறேன். அதுவும் கூட டப்பிங் படம்.

                   ஆக்ஷன் படங்களை இளைஞர்கள் மட்டுமே ரசிக்கிறார்கள்.. தமிழில் முழுவதும் ஆக்ஷன் படம் என்ற ஒன்றும் வந்ததில்லை. ஒரு காதல் கதையில் ஆக்ஷன் கொஞ்சம் அதிகமாக இருந்தால் அதை ஆக்ஷன் படம் என்று சொல்கிறார்கள். ரன், சண்டைகோழி போன்றவை ஆக்ஷன் படம் என்கிறார்கள். அல்லது விஜயகாந்த், அர்ஜீன், படத்தை சொல்கிறார்கள்.

                  
                  காதலைத் தவிர உணர்வுகளை சொல்லும் படங்களை நம்மவர்கள் ஓட வைத்ததாய் சரித்திரம் இல்லை. இதற்கு நான் மேலே சொன்ன “அழகி எடுக்கத் தெரிந்த தங்கர்பச்சானுக்கு சொல்லமறந்தகதை எடுக்கத் தெரியாதா?....” என்பதே என் பதில். காதல் மட்டுமே எவ்வளவு அபத்தமாக சொன்னாலும் (நாக்கை வெட்டுவது, கிட்னி கொடுப்பது, சட்னி கொடுப்பது)தப்பித்தவறியாவது ஓடிவிடும்.. அதிலும் நீங்கள் காதலை கொஞ்சம் புதுமையாக சொல்லிவிட்டால் போதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ஆனால் மற்ற உணர்வுகளை நீங்கள் எவ்வளவு நன்றாக சொல்லியிருந்தாலும் அது ஓடுவதற்கு எந்த கியாரண்டியும் கொடுக்க முடியாது.

            நமது புதுமைவிரும்பி  இயக்குனர்கள்... தமிழ் சினிமாவை எப்படியாவது மேலே ஏற்றித் தீருவது என கங்கனம் கட்டிக்கொண்டு படம் எடுப்பார்கள். முதல் படத்தை எடுக்கும் போது ஒரு வித்தியாசமான கதையை காதல் பிண்ணனியி்ல் எடுப்பார்கள். மக்கள் அதற்கு கொடுக்கும் ஆர்வத்தைப் பார்த்து ‘அட மக்கள் வித்தியாசமான படத்த ஏத்துக்கிறாங்கப்பா’ என்று சொல்லி அடுத்த படத்தை முற்றிலும் புதுமையாக செய்து.. அடிவாங்குவார்கள்.. சமீபத்தில் அங்காடித்தெரு படம் தந்த தைரியத்தில் அடுத்து வசந்த பாலன் எடுக்க இருக்கும் ‘அறவான்’ படத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

              ‘மதராசபட்டினமே’ இன்னும் இரண்டு வரிகள் அதிகமாய் சுதந்திரத்தை பற்றி பேசியிருந்தால் ‘டுமீல்’ ஆகியிருக்கும். படம் வெளியான முதல் இரண்டு நாள் யாரும் தியேட்டருக்கு போகவில்லை. சுதந்திரம், போராட்டம்னு ‘மொக்கயை(?)’ போட்டிருவாங்களோனு மக்கள் பயந்தனர். படம் பார்த்துவிட்டு வந்து ‘சே.. சே.. அப்படியெல்லாம் இல்லப்பா... நல்லபடம்’ என்று சத்தியம் செய்தபின்தான் படம் பிக்-அப் ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் விஜயின் இதற்கு முந்தய படமான ‘பொய் சொல்லப் போறோம்’-மில் ரியல் எஸ்டேட்டில் நடந்து கொண்டிருக்கும் போர்ஜெரியையும் அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தையுமாக, இன்றைய வாழ்வின் யதார்த்ததை மிக நன்றாக பதிவுசெய்திருப்பார். ஆனாலும் கூட அந்த படத்தை யாரும் ஆதரிக்க வி்ல்லை.

                  நான் ஆஹா எப்.எம் - மில் வேலை செய்யும் போது ஒருநாள் காலை விவாதத்திற்கு எந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று டாபிக் வைத்தோம். அதற்கு ஒருவர் “சோகப்படங்கள் பிடிக்காது.. நாங்களே கஷ்டங்கள மறக்க தான் தியேட்டருக்கு வர்றோம். அங்கயும் வந்து கஷ்டம், கஷடம்னா எப்படி பார்க்கத் தோணும்.. பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு டீ வாங்கி கொடுத்தா அவன் சோகத்தை பூரா சொல்லப் போறான்” என்றார்.. இதும் கூட உண்மை தான்.

                   மேலும் உணவு என்று எடுத்துக் கொண்டால் கூட வெளிநாட்டில் பீஸா என்றால் ஒரு பீஸாவை வர வைத்து இடது கையாலேயே எடுத்து சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். ஆனால் நம்மவர்கள் 3 இட்லி என்றால் கூட அதற்கு சட்னி, சாம்பார், மிளகாய் பொடி, ஓரமாய் ஒரு வடை என்று கலந்து கட்டி அடிப்பார்கள்.. படமும் கூட அப்படித்தான். காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்ஷன், கிளாமர் என எல்லாம் கலந்த ‘மசாலா’ படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. ஆனால் அதிலும் கூட அளவுக்கு அதிகமாய் போவதால் தான் சில தளபதிகளின் படங்கள் கூட தோற்றுப் போகின்றன.

                     மொத்தத்தில் நம் மக்கள் புதுமையை எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் அது 8 அடி, 16 அடி பாய்ச்சலில் அல்ல.. 7, 8 சென்டிமீட்டர்களில்... அதற்குத்தான் அவர்களை அவர்கள் வாழும் சூழல் பழக்கியுள்ளது என்பது எனது கருத்து.

                     நீங்களும் உங்கள் கருத்தை தவறாமல் பதிவுசெய்யுங்கள்...

11 comments:

 1. good analysis

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது உண்மை.நம் நாட்டு மக்களில் பெரும்பாலும் ஜனரஞ்சகமான அல்லது மனதை தொடும் இயல்பான காதல் கதை சொல்லும் படங்களையே விரும்புகின்றனர்.

  ReplyDelete
 3. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி கௌதமன்.. அடிக்கடி வாருங்கள்..

  ReplyDelete
 4. பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க... கலக்கல்... :)

  ஓட்டு பட்டன் காணோமே... அதை சேர்த்துடுங்க... http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

  ReplyDelete
 5. அருந்ததி படம் சாமி படம் இல்ல என்பது என்னுடைய கருத்து ..

  ReplyDelete
 6. ரொம்ப தேங்க்ஸ் ஜெய்.. நான் blogக்கு புதுசு.. உங்கள மாதிரி ஆட்கள் சொல்லித்தர சொல்லித்தர தான் இதுல இருக்கிற வசதிகளை தெரிஞ்சுக்கறேன். commentக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள். சண்முகா உங்கள் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 7. நல்லா எஸ்ஸே மாதிரி விலாவாரியா இருக்கு.

  ReplyDelete
 8. gtalk-ல invite பண்ணி இருக்கேன்... முடிஞ்சா சேர்த்துக்குங்க... :)

  ReplyDelete
 9. Nalla padhivu

  ana kamal neenga ninakkura category-la illai, avarum neenga sonna commercial comedy piece thaan

  ippo irukkira hollywood padangal maathiri tamilil vara innum 150 years agum

  tc

  madhumidha
  madhumidha1@yahoo.com

  ReplyDelete
 10. உங்க பதிவுக்கு நன்றி மதுமிதா.. அதுசரி நான் கமல் பத்தி இதுல எதுவுமே சொல்லலையே.. திடீர்னு ஏன் அவரை ஏன் காமெடி பீஸ்னு சொல்றீங்க..

  அதுபோல தமிழ்படம் வளர, “வருஷங்க ஆகனும்னு அவசியம் இல்ல.. மனுஷங்க மாறனும்”
  சே... நாடோடி பஞ்ச் டயலாக் பின்னுறடா.. ஹா.. ஹா..

  ReplyDelete
 11. அருமையான பதிவு,தொடர்ந்து எழுதுங்க.
  @ மதுமிதா
  கமல் commercial comedy பீஸ்னு சொன்னத என்னால ஏத்துக்க முடியாது.50 வருஷமா சினிமாவில இருக்க அவருக்கு ஜனங்களோட மனசை பத்தி நல்லா தெரியும்.இருந்தும் மூன்றாம் பிறை,குணா,குருதிப்புனல் [பாடல்கள் இல்லாத படம்] ஹேராம்,அன்பே சிவம் போன்ற படங்களை தந்திருக்கிறார்.இதில் குருதிப்புனல் தவிர மற்றயவை தோல்வி அடைந்தன.மருதநாயகம்னு ஒரு படம் கிட்டத்தட்ட 10 வருஷமா எடுக்க முயற்சி பண்றாரு,அந்த படம் வெளியாகினால் தமிழ் சினிமாவில் அது ஒரு trademark படமா இருக்குனு சினிமாவில உள்ளவங்க சொல்றாங்க,But அதுக்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்,இதனாலேயே அத தயாரிக்கிறதுக்கும் யாருமே முன்வரல.
  @ ஜோதிகுமார்
  “வருஷங்க ஆகனும்னு அவசியம் இல்ல.. மனுஷங்க மாறனும்”
  சூப்பர் பஞ்ச்.

  ReplyDelete